news

தமிழின அழிப்பின் நீதிக்காக யாகத்தில் தன் ஒவ்வொரு மூச்சுக்காற்றையும் தியாகம் செய்த மனிதம் திரு அன்ரன் பிலிப் சின்னராசா

கனடா தமிழ் சமூகம், மிக மூத்த மனித உரிமை செயற்பாட்டாளராக கடினமான பாதைகளை கடந்து பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த ஒரு பெரு மனிதரை இழந்து நிற்கிறது. திரு  அன்ரன் பிலிப் சின்னராசா அவர்களின் இழப்பு கனடா தமிழ் சமூகத்தை பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆயினும் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்காக என்றும் வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் உணர்வாளர்கள் மனங்களிலும் நிலைத்திருப்பார்.

1970 களின் ஆரம்பத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் சிங்கள பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்ட தமிழின அழிப்பு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட ஆரம்பித்து கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்நாளை ஈழத்தமிழ்களுக்காக அர்ப்பணித்த பெருந்தகை திரு  அன்ரன் பிலிப் அவர்கள்!

1970 பதுகளின் இறுதியில் தமிழ்மக்களுக்கு எதிரான இன அழிப்பிலிருந்து தங்கள் சமூகத்தின் இருப்பை தற்பாதுகாத்துக் கொள்வதற்கான நிரந்தர தீர்வாக தமிழீழ கோட்பாடு முன்னிறுத்தப்பட்ட காலப்பகுதியின்  போதே அருட்தந்தை அன்ரன் பிலிப் அவர்களின் பணி அளப்பெரியதாக உணரப்பட்டது.

1981 இல் ஈழத்தமிழர்களின் கல்விப்பொக்கிஷங்களில் மிக முக்கியமான பழைமை வாய்ந்த யாழ் நூலகம் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களுடன் அரச கைக்கூலிகளாலும் பேரினவாதிகளாலும் எரியூட்டப்பட்ட போது, கொதித்தெழுந்து நூலக எரியூட்டல் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து உலக நாடுகளுக்கு அனுப்பி அடக்கி அழிக்கப்படும் தமிழினத்திற்கான நீதி கோரலுக்காக முனைப்புடன் செயற்பட்டார். தமிழின அழிப்பில் இருந்து மக்களை காக்க அவர் ஒடுக்கப்படும் இனத்தின் பக்கம் நின்று அயராது உழைத்தார். இதை கேள்வியுற்ற இலங்கையின் பேரினவாத அரசு, அவரை கைது செய்து வெலிக்கடை சிறையில் அடைத்து வைத்தது.

தொடர்ச்சியாக 1983 யூலை காலப்பகுதியில் இலங்கையின் பேரினவாத சிங்கள காடையர்கள், தலைநகர் உட்பட்ட தென் இலங்கையில் இருந்த தமிழர்களை வாக்காளர் இடாப்பின் முகவரிகளூடாக தேடித்தேடி கொன்று குவித்து, பாலியல் வன்கொடுமை செய்து, வெறியாட்டம் ஆடிய கொடூரமான  இன அழிப்பு பேரினவாத அரசாங்கத்தின் பின்னணி ஆதரவுடன் அரங்கேறியவேளை வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் கைதிகளையும் சிங்கள கைதிகளின் உதவியுடன் கொன்றுகுவிக்கும் அவலமும் அரங்கேறியது. அந்த காலகட்டத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பலருடன் இவரும்  படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பலரும் நம்பினர். ஆனால் அதிர்ஸ்டவசமாக அவர் தங்கியிருந்த சிறைச்சாலை அறை பூட்டுடை சிங்கள கைதிக் காடையர்களால் உடைக்கமுடியாமல் போனதாலும் அறைக்குள் இருந்த மேசை ஒன்றை உடைத்து அதன் கால்களை கொண்டு, பூட்டை காடையர்கள் உடைக்கவிடாமல் இவரும் மற்ற சில சிறைவாசிகளும் மேற்கொண்ட வாழ்வா சாவா போராட்டத்தின் விளைவாலும் உயிர்பிழைத்தார். இந்த 1983 யூலை தமிழின அழிப்பின் வாழும்  சாட்சியங்களில் ஒருவராக 1983  யூலை 27 ம் திகதி தான் கண்ட இனப்படுகொலை காட்சிகளையும் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த Dr. ராஜசுந்தரம் அவர்களை காடையர்கள் எவ்வாறு இழுத்து சென்று உடனடியாக கொன்றனர் என்பதையும் தன் சொந்த வார்த்தைகளில் சாட்சிப்படுத்தியும் இருந்தார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரிய அவரின் போராட்டங்களின் காரணமாக அவர் சிங்கள பேரினவாதிகளினால் தொடர்ச்சியாக அனுபவித்த பல்வேறு கொடுமைகளால் நாட்டை விட்டு வெளியேறிய திரு அன்ரன் பிலிப் அவர்கள் கனடாவை வந்தடைந்து தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தன் அறப்போரை முன்னெடுத்து வந்தார்.

பல உலகத்தலைவர்களை சந்தித்து இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படும் தமிழின  அழிப்பு நடவடிக்கைகளை பல்வேறு ஆதரங்களுடன் விளக்கும் பணியை தொடர்ந்தார். அவரது பணிகளின் விளைவாக இன அழிப்பு தொடர்பான பல ஆவணப்படுத்தல்கள் பல்வேறு உலகநாடுகளை சென்றடைந்ததுடன் உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கை விவகாரங்களில் அதிகம் தலையிட வேண்டிய அழுத்தத்தையும் அதிகமாக்கியது என்றால் மிகையாகாது. தமிழீழ புனர்வாழ்வு நிறுவனத்துடன்(TRO)   பணியாற்றி தமிழின  அழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகள் சென்றடைய உதவினார்.

இலங்கையில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து கனடா வந்த பல்வேறு ஈழத்தமிழர்கள் கனடாவின் சாதாரண வாழ்வில் இணைய வைக்கும் பணியில் மிக முக்கிய பங்காற்றிய கனடா தமிழீழ சங்கம் ( Tamil Eelam society of Canada) இல் பெரும் தூணாக திகழ்ந்தார். அவரது அயராத உழைப்பின் விளைவால் கனடாவிற்கு  குடிபெயர்ந்த பல ஈழத்தமிழ் மக்கள் புது வாழ்வு பெற்றனர்.

2009 இல் ஈழத்தில் வடபகுதியில் நடந்தேறிய உலகின் மிகப்பெரும் இனப்படுகொலைகளில்/ போர்க்குற்றங்களில் ஒன்றாக கருதப்படக்கூடிய தமிழின  அழிப்பை தொடர்ந்து “Center for War victims and human rights” என்ற அமைப்பை நிறுவி மிகமுக்கியமாக 2009 உள்ளிட்ட  சிங்கள பேரினவாத அரசின் போர்குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்பை  ஆவணப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் பணியில் அல்லும் பகலும் ஈடுபட்டார். 2010 ம் ஆண்டு மேற்படி நிறுவனம் ஏற்பாடு செய்த தமிழ் இன அழிப்பு தொடர்பான மாநாட்டில் 1956 முதல் 2008 வரை இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு திணிக்கப்பட்ட  இன அழிப்பு நடவடிக்கைளை ஆதாரங்களுடன் உள்ளடக்கிய புத்தகம் ஒற்றை வெளியிட்டார். இது சர்வதேச அரங்கில் தமிழ் இன அழிப்பு ஆவணங்களில் முக்கியமான ஒரு புத்தகமாக ஈழத்தமிழ்  சமூகத்தால் கருதப்படுகிறது.

கனேடிய அரசு, “தமிழின அழிப்பு கல்வி வாரம்” முன்னெடுப்பை மேற்கொண்டபோது மிகமுக்கியமான இந்த முன்னெடுப்புக்கு வலுச்சேர்க்கும்  சாட்சி ஆவணமாக திரு  அன்ரன் பிலிப் அவர்களுடைய நேரடி சாட்சியங்கள் கொடுக்கப்பட் டிருந்தன . அவரின் மனித உரிமை மீறல்களுக்கான நீதி கோரும் அறப்பணிகளின்

தொடர்ச்சியாக,  Bramptan நகரில் கட்டப்பட இருக்கும் “தமிழின அழிப்பு நினைவாலயம்” உருவாக்கத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

 

இறக்கும் இறுதி மணித்துளி வரைக்கும் ஈழத்தமிழர்களின் மீதான இனஅழிப்பின் நீதிக்கான போராட்டமாகவே தன் ஒவ்வொரு மூச்சுக்காற்றையும் சுவாசித்த பெருமனிதம் மிக்க பெருந்தகையின் இழப்பு ஈழத்தமிழ் சமூகத்தை பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு!

திரு  அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள்  ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக என்றும் இதயங்களில் வாழ்ந்திருப்பார்.

உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை (FGTO)
https://www.fgto.org/

Vel Velauthapillai

Canadian Tamil Activist who advocates for Eelam Tamil's right to self-determination and wider recognition of Sri Lanka's genocide against Tamil.

Related Articles

Back to top button