கியூபெக் மாகாணத்தில் தமிழீழ தேசிய கொடியுடன் நடைபெறவுள்ள தமிழர் மரபுத் திங்கள் 2022

கியூபெக் மாகாணத்தில் தமிழீழ தேசிய கொடியுடன் நடைபெறவுள்ள தமிழர் மரபுத் திங்கள் 2022
கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்காவது தமிழர் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு வழமை போல மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வுகளுக்கான முதலாவது பொதுகூட்டம் கடந்த சனிக்கிழமை (11.20.2021) திரு. வினோத் நவஜீவானந்தம் தலைமையில் கணேஷா விருந்துபசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட சில சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆரம்பம் முதல் பங்காளிகளாக இருக்கும் Montamil ம் கலந்து கொண்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் உணர்வு கொண்ட ஊர் சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழீழ தேசியக்கொடியுடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட வேண்டும் என்ற பல தமிழ் இன உணர்வாளர்களின் நியாயமான கோரிக்கையினை முன்வைத்தார்கள். இதன் போது சில உறுப்பினர்கள் நமது தேசியக் கொடிக்கு கனடாவில் தடை என்பதால் அரசியல் பிரமுகர்கள் நிகழ்வுக்கு வருகை தர மாட்டார்கள் என்ற ஒரு தெளிவற்ற நிலையில் இருந்ததால் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற பின்னர் அனைத்து உறுப்பினர்களுக்கும் கனடாவில் தேசியக் கொடிக்குத் தடை இல்லை என்ற விடயம் தெளிவு படுத்தப்பட்டு ஏக மனதாக தேசிய கொடியுடன் தான் அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்படும் என்றும் தங்களுடன் தொடர்பில் இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இந்த விடயம் தொடர்பான விளக்கம் கொடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒட்டாவா பாராளுமன்றுக்கு அருகில் கொடி நாள் கொண்டாடப்பட்டதும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
இந்த நிகழ்வுக்கான வேலைகள் அனைவரிடமும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. வழமை போல ஊடகம் சார்ந்த விடயங்கள் மொன்தமிழுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் உலகம் பூராகவும் உள்ள தமிழர்கள் பார்த்து மகிழ நேரலையாக எமது சக ஊடகங்களான IBC தமிழ் மற்றும் அனலை எக்ஸ்பிரஸ் உறுப்பினர்கள் நேரடியாக மொன்றியால் வந்து இந்த நிகழ்வுகளைச் னசிறப்பாக நடாத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
” ஒற்றுமையே பலம் ” என்பதற்கு அமைய நடைபெற உள்ள இந்த நிகழ்வுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வழமை போல எங்களுடன் இணைந்திருங்கள்.