eventsservices

ஒட்டவா வைத்தியநாதன் சிவன் கோவில் பக்தி பயணம்

கியூபெக் மூத்தோர் இணையத்தால் முன்னெடுக்கப்பட்டு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒட்டவா வைத்தியநாதன் சிவன் கோவில் பக்தி பயணம்.

தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,

அக்டோபர் 2, 2021, சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் கோட் தி நெஜ் (Côte-des-Neiges) கியூபெக் மூத்தோர் இணையத்திலிருந்து பல சிவபக்தர்களை கொண்டு மொன்றியல் திருமுருகன் கோவில் மேலும் பல பக்தர்களை அரவணைத்துக்கொண்டு மொத்தம் 33 பேருடன் (பெரியவர்கள் 30, சிறுவர்கள் 3) பெரிய பேருந்து ஆலயம் நோக்கி புறப்பட்டது .

கியூபெக் மூத்தோர் இணையத்தலைவர் ஐயா திரு.முத்துக்குமார் சிவானந்தன் பேருந்திலிருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று வசதியை உறுதி செய்து தண்ணீர் போத்தல் வழங்கினார்.

பனிமூட்டத்துடன் சிறு தூறலுடன் சிவபக்தி பாடல்களுடன் இனிதே தொடங்கியது பயணம்.இடையில் நிமிடங்கள் தேநீர் இயற்கை உபாதைகளுக்கு ஒதுக்கப்பட்டு பக்திபயணம் தொடர்ந்தது.

2 மணித்தியால பயணம் ஒட்டவா வைத்தியநாதன் கோவிலை சென்றடைந்தது.சிறிய அளவில் தற்போது கோவில் அமைந்தாலும் பெரிய கோவில்கட்டும் பணிக்காக காத்திருந்தது சிவனாலயம்.

சிவபக்தர்கள் அனைவரும் அர்ச்சனை, எள் தீபம் வேண்டி உள்நுழைய ஆலயம் நிரம்பி வழிந்தது.

கற்பகவிநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி இருபுறமும் வீற்றிருக்க வைத்தியநாத சுவாமி சிவலிங்கமாக தலையில் நாகமுடி சூட காட்சி தருகிறார்.

தையல்நாயகி அம்மாளும், நடராசா பெருமாளும்,நவக்கிரக மூர்த்திகளும் பைரவரும், சூரிய பகவானும் உடனுறைந்திருக்கிறார்கள்.எள் விளக்கு ஏற்றப்பட்டு வெளியில் வைக்க வழி செய்யப்பட்டுள்ளது .

இடது பக்கத்தில் கொண்டையுடன் நம்பூதரி போலிருந்த பூசாரி சமசுகிரத்தில் மந்திரம் ஒத மனது ஏற்றுகொள்ளமறுத்தது. வருங்காலத்தில் சைவசபை இதனை கருத்தில்கொள்ளவேண்டும். தமிழில் ஒதி இறையை துதிக்க வழி செய்ய வேண்டும். சிறு சிறு விடயங்களே பெரிய மாற்றத்திற்கான வழி என்பது எனது கருத்து. பிழையெனில் மன்னிக்கவும் .

மூத்தோர் இணைய தலைமையாளர் ஐயா திரு.முத்துக்குமார் சிவானந்தன் கணீரென தேவாரம் தீந்தமிழில் பாடி அந்த மனக்குறை தீர்த்தார். தொடர்ந்து கோளறு பதிகம் அனைத்து பக்தர்களாலும் பாடப்பட்டது.
நானும் சேர்ந்து பாடினேன் இல்லை படித்தேன்.இசையில் ஞான சூன்யம் நான்.

சிவாலயம் அமைப்பதற்க்காக நிதி திரட்டும் நோக்கோடு சைவ தோத்திர பாடல் திரட்டு என தமிழ் தேவாரம்,திருவருட்பா உள்ளிட 244 பக்கங்களை கொண்ட புத்தகம் 15$ க்கும், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வலம்புரி சங்கு 100$க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நான் எதனை வாங்கியிருப்பேனென்று உங்களுக்கே தெரியும்.

முன்பே அறிவிக்க பட்டதால் சிறப்பாக அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.உணவின் சுவையை துல்லியமாக கண்ணடறியும் எனது மகளே நன்றாக உள்ளது என சாப்பிட்டாள் அன்னதானத்தை.

திருவாசகம்,திருவருட்பா,இராமாயணம்,திருக்குறள் உள்ளிட்ட பழைய பதிப்புகள் அடங்கிய சிறு நூலகமும் உள்ளே இருந்தது பரவசமூட்டியது.ஆலயத்தின் ஆண்டுமலர் இலவசமாக பக்தர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டது.

கோவிலின் வரலாறு தெரிந்து கொள்ள புரட்டிய போது திராவிட மக்கள் என எம்மினத்தை குறிக்கும் கட்டுரை கண்டு புத்தகம் கொடுத்தவரை நேரில் கண்டு அடுத்த இதழில் மாற்றிவிடுங்கள் ஐயா அடையாளத்தை மறந்தது போதும் ஏமாந்தது போதும் என தமிழன்பியாக ஓர் வேண்டுகோளையும் வைத்து வெளிவந்தோம்.

ஆலயத்தின் முன்பும் பேருந்தின் முன்பும் புகைப்படம் எடுத்து கொண்டபின் வீடு நோக்கிய பயணம் தொடங்கியது.

உண்ட களைப்பில் சிறிது கண்ணயரலாம் என்றிருந்தவர்களின் எண்ணத்தில் தனது கணீரென்ற குரலால் மண்ணை போட்டார் திரு கேதீசுவரன் அண்ணா. அத்தனை கம்பீரமான குரலில் கோளறு பதிகத்தை மீண்டும் பாடி பொருளையும் விளக்க அருமையாக இருந்தது.

அதனை தொடர்ந்து மொன்றியல் நகைச்சுவை நாயகர் திரு பாலா அண்ணா அவர்களோடு சேர்ந்து நல்ல பாட்டுக்கள், நகைச்சுவை என வாய்விட்டு சிரிக்க வாய்த்திட்டது நல்ல வாய்ப்பு.

அன்றாடம் மாறிவரும் வாழ்வியல் மாற்றங்களுக்கேற்ப தன்னை தகலறிவோடு தகவமைத்து கொள்ளும் நல்லதொரு கலைஞர்,திறமைசாலி திரு பாலா அண்ணா அவர்கள்.பெருந்தொற்றால் திரு பாலா அண்ணணுக்கு பெரும்பீதி போலும் , மிக நீண்ட தாடியுடன் பாலா அண்ணா மதம் மாறியிருந்தார்.

காலையிலேயே பேருந்துக்காக காத்திருக்கும் போது தாடி மற்றும் முகக்கவசத்தோடு பாயை(பாலா அண்ணா) பார்த்து எனது துப்பறியும் மூளை திருமுருகன் கோவிலில் தீவிரவாதி என எனது சிந்தனைக்குதிரை பாகிஷ்தான்,ஆப்கானிஷ்தான் வரை சென்று வந்தது வேறுகதை.

திருமதி புஷ்பராணி அவர்களின் கூத்துபாடலுடன் ,எனது பயணம் பற்றிய கருத்தும் அவதானிப்பும் பகிர்ந்திடும் வாய்ப்பும் கிடைத்தது.

அ,ஆ அணிகள் பிரிக்கப்பட்டு பாட்டுக்கு பாட்டும் நடந்தது.பாடும் திறமை கொண்ட பல படகிகளை நமது சமூகம் குசினியில் விட்டுவிட்டது வருத்தத்திற்குரியது. ஆனால் தற்போது அப்படி இல்லை விஜய் தொலைக்காட்சியில் பாடுவதையே தனது லட்சியமாக கொண்டு வளர்ந்து வருகிறது நமது சமூகத்தின் ஒரு பகுதி.

ஐயா திரு.முத்துக்குமார் சிவானந்தன் அவர்களின் எப்படி சிறப்பான நல்வாழ்வு வாழலாம் என்ற உரையும் அருமையான குரலில் தேவாரபாடலும் உள்ளத்தை கொள்ளை கொண்டு சிந்திக்கவும் தூண்டியது.

திருமதி தவராஜாசிங்கம் குடுமனத்தினர் அம்மாளின் அன்பினால் அனைவருக்கும் வடைகள் ,எள்ளுருண்டை தாங்கிய சுவையான பலகார பொதி கிடைத்தது. விடியற்காலை 3 மணியிலிருந்து பலகாரம் செய்து அழகாக பொதி செய்து அத்தனை பக்தர்களுக்கும் கொண்டு வந்திருந்த அவரது அன்பு நெகிழ்வாக இருந்தது.

மேலும் சில அன்பர்களால் வேர்க்கடலையும், பல்கடலை இனிப்பும் வழங்கபட்டது .

எள்ளுருண்டை செய்முறையை பக்கத்திலிருந்த அம்மாள் விளக்க எனது தந்தையார் போலிருந்த அவரது கணவர் “செய்முறை எல்லாம் நல்லாத்தான் சொல்லுவா! செய்யத்தான் மாட்டா” என்று தனது
மனைவியை சீண்ட அந்த அம்மாளோ விடாமல் “நல்லா செய்து நல்லா சாப்பிட்டதால தான் சர்க்கரை என்றிருக்கிறீர்கள்” என்று கூற பார்க்கவே அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாக நின்று வாழ்ந்த அவர்களது நிறைவான வாழ்வு அழகிய கவிதையாய் எனக்கு தோன்றியது.

மீண்டும் ஒரு சிறிய தேநீர் இடைவெளியோடு மொன்றியல் திருமுகன் ஆலயத்தை மாலை 3:30 மணியளவில் அடைந்து அங்கே சில பக்தர்களை விட்டு கோட் தி நெஜ் (Côte-des-Neiges) மூத்தோர் இணையத்தை நோக்கி நகர்ந்தது பேருந்து .

மொத்தத்தில் ஒட்டவா வைத்தீசுவரம் ஆலய பயணம் பக்தி பரவச பயணமாகவும் மனிதர்களை சந்தித்து “கதவை திற காற்று வரட்டும்” என்பது போன்ற ஒரு புத்துணர்வு பயணமாகவும் இருந்தது.

வாய்ப்பு உள்ளவர்கள் சென்று வாருங்கள் .மொன்றியலில் இருந்து 2 மணித்தியால பயணம் தான். மறக்காமல் புதிய ஆலய பணிக்கு நன்கொடையாக அர்ச்சனையோ, எள்விளக்கோ, புத்தகமோ,வலம்புரி சங்கோ பண்டமாற்று செய்து பயன்பெறுங்கள். பயன்படுபவராய் இருங்கள்.

திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

குறிப்பு:

சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.

அதாவது நாம் தான் அது, அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்த திருநடனம். அதாவது மனிதனின் அகம் ஒரு கோயில் உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும், சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர். இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள். அதற்க்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.

உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அர்த்தம். பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும். கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும். உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.

நன்றி
இளவரசி இளங்கோவன்
மொன்றியல் , கனடா

Related Articles

Check Also
Close
Back to top button