news

கியூபெக் மாகாணத்தில் மார்கழி 25ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்க கியூபெக் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

கியூபெக்கில் தொடர்ந்தும் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கியூபெக் மாகாண அரசானது, இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நத்தார் விடுமுறையையொட்டி, பல புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது.

அந்த வகையிலே, மார்கழி 17ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை நிலையிலிருந்த வட்டாரங்கள், செம்மஞ்சள் நிறமாகவும், செம்மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், சிவப்பு நிறமாகவும், மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக, புதிதாக சிவப்பு நிற எச்சரிக்கைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என்றும், அத்தோடு, அலுவலக ஊழியர்கள் கட்டாயமாக வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  [www.montamil.ca]

மேலும், மார்கழி 25ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, மளிகைக் கடைகள், மருந்தகங்கள், வங்கிகள் போன்ற அத்தியாவசியத் தேவை நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலே, பெரிய கடைகள் திறக்கப்படும், ஆனால் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதோடு, மதுபானக் கடைகள் மற்றும் கஞ்சாக் கடைகள் என்பனவும் பல் மருத்துவ சேவைகள் மற்றும் கண் மருத்துவ சேவைகள் போன்ற சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிகை அலங்கார நிலையங்கள், ஸ்பாக்கள், நக அலங்கார நிலையங்கள் என்பன திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய விதிமுறைகளை அறிவித்ததோடு, மக்களை சமரசப்படுத்துவதற்காக, பொது வெளிப்புற இடங்களில் அதிகபட்சம் 8 நபர்கள் இணைந்து ஒன்றுகூட முடியுமென்றும், தனியார் வீடுகளின் வெளிப்புறத்தில் கூடுவது முன்பு போல் தடைசெய்தவாறே உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு புதிய மாற்றமாக, சிவப்பு நிற அபாய எச்சரிக்கை வட்டாரங்களில் தனியாக வாழும் நபர்கள், ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரிடம் சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தபடி ஆரம்பப் பாடசாலைகள் தை 4ஆம் திறக்கப்படமாட்டாது. ஆனால், வீட்டுப்பாடங்கள் மற்றும் இணையக்கல்வி மூலம் பிள்ளைகளுக்கு வகுப்புகள் நடைபெறும். தை 11ஆம் திகதி, ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குச் சென்று, வகுப்புகளுக்குச் சமூகமளிக்கவேண்டுமென்றும், அத்தோடு, குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கப்பட்டிருப்பினும், தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்களையும், குழந்தைகளை வீட்டில் வைத்திருக்குமாறும் வலியுறுத்தப்படுகின்றது.

தற்போது, கடந்த சில நாட்களாக, கியூபெக் மாகாணத்தில் 1600க்கு மேற்பட்ட தொற்றுக்கள் வந்துள்ளன. இருப்பினும், இப் புதிய நடவடிக்கைகளின் மூலம், தொற்றுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியுமென்று கியூபெக் மாகாண அரசு நம்புகிறது.

Related Articles

Back to top button