கோவிட்-19 : சிவப்பு நிற அபாய எச்சரிக்கை பற்றிய அறிவித்தல்

கியூபெக்கில், கோவிட்-19 தொற்றானது கடந்த வைகாசிமாதம் 6ம் தேதிக்குப் பின்னரான காலப்பகுதியில், நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 27ம் தேதி அதிகூடிய தொற்றுக்களாக 1036 தொற்றாளர்களும், இன்றைய தினம் 750 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கியூபெக் மாநிலத்தில், இதுவரை 72 651 தொற்றுக்களும் அத்தோடு 5826 நபர்களும் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்தும் உள்ளார்கள். அதனால்தான், தற்போது சிவப்பு அபாய அறிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், ஐப்பசி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நான்கு வாரங்களிற்குத் தனியார் ஒன்றுகூடல்கள், மதுபானச்சாலைகள், நூலகங்கள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட இடங்கள் ஆகியன கியூபெக் சிற்றி, மொன்றியல், சவுத்சோர், சோடியர் அப்பாலாஷ் மற்றும் லவால் ஆகிய பிரதேசங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் உணவை வெளியில் எடுத்துக்கொண்டு செல்லமுடியும் அத்தோடு வாடிக்கையாளர்களிற்குக் கொண்டுசென்றும் வழங்க முடியும்.

பொதுவான விதிமுறைகள் பின்வருமாறு :
அத்தியாவசியமற்ற தேவைகளைத்தவிர்த்து வீட்டில் இருக்குமாறும், வீடுகளில் ஒன்றுகூடுவதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்களில் வாழும் உறவினர்களைக் காண ஒரு நாளைக்கு இருவர், ஒரே நேரத்தைத் தவிர்த்துச் செல்ல முடியும். அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு, பிரதேசம் விட்டுப் பிரதேசம் செல்வதை தவிர்க்குமாறும் வேண்டப்பட்டுள்ளது. ஆலயங்களில் மற்றும் இறுதிக்கிரிகை செய்யும் இடங்களில், 25 நபர்கள் மட்டுமே, தரவுகள் பதிவுசெய்யப்பட்டு, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து முகக்கவசங்களுடன் ஒன்றுகூட முடியும். தொடர்ந்தும் பாடசாலைகள், சிகை அலங்கார நிலையங்கள், வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சமூக மையங்கள் போன்றவை திறக்கப்பட்டிருக்கும்.
Photo: Valerie Plante/Facebook