ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்திலிருந்து கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை

0

கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை

முன்னெப்போதும் கண்டிராத இந்த இக்கட்டான காலத்தில், ஒன்ராறியோ மக்கள் அனைவரும் தமது உழைப்பினை வலிமைப்படுத்தி, கடமையையும் சேவை மனப்பான்மையையும் அதிகரித்து கொடிய இத்தொற்று நோயினை வெல்வதற்காக ஒன்றினணந்து செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. எமது சுகாரார கட்டமைப்பு அதிகரித்துவரும் கொவிட்-19 நோயாளர்கள் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் அடுத்து வரும் வாரங்கள் மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளன.

ஒன்ராறியோவின் செயற்றிட்டம் 2020
கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் மக்களினதும் பொருளாதாரத்தினதும் நலனைக் கருத்திற்கொண்டு ஒன்ராறியோ அரசு 17 மில்லியன் டொலர் செயற்றிட்டத்தினை வெளியிட்டுள்ளது. இச்செயற்றிட்டமானது, உலகளாவிய ரீதியில் சடுதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு ஒன்ராறியோ மாகாணம் ஈடுகொடுக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இவ்வகையில், ஒன்ராறியோ வாழ் மக்களுக்கும் அவர்களின் வேலைவாய்ப்புகளுக்குமாக 3.3 பில்லியன் டொலர்களும், சுகாதார சேவைகளுக்காக 3.3 பில்லியன் டொலர்களும், 7 பில்லியன் டொலர்கள் நேரடி ஆதரவுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதியோருக்கான ஆதரவு
ஒன்ராறியோவின் தலைமை சுகாதார அதிகாரி அவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டோர், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தோர், இன்னபல உடல்நல சிக்கல்கள் உள்ளோர் முதலியோரை வீட்டிலேயே இருக்குமாறு பணித்துள்ளார். ஒன்ராறியோ அரசு வணிக நிறுவனங்கள் மற்றும் இலாபநோக்கற்ற அமைப்புகளுடன் இணைந்து முதியோர்களுக்கான உணவு, மருந்துகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன்மூலம் அவர்கள் தம்மைத் தனிமைப்படுத்துவதற்கு ஏதுவான நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

உடல் ரீதியான இடைவெளியைப் பேணுதல்
ஒன்ராறியோவின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியின்  ஆலோசனையின் அடிப்படையில், பொது நிகழ்வுகள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடும் கூட்டங்கள் போன்றவற்றை தடைசெய்ய மார்ச் 28, 2020 அன்று ஒன்ராறியோ அரசு அவசர உத்தரவை பிறப்பித்தது. “கொவிட்-19 தொற்றுநோய் பரவலைத் தடுத்து எமது சமுகத்தினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உடல் அளவிலான குறிப்பிட்ட இடைவெளியினைக் கடைப்பிடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என முதல்வர் டக் ஃபோட் தெரிவித்தார்.
இவ்வுத்தரவிலிருந்து, அத்தியாவசிய பணியிடங்களில் பணிபுரிவோர் மற்றும் ஒரே வீட்டில் வாழும்  உறுப்பினர்கள் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இறுதிச் சடங்குகளில் கலுந்துகொள்ளும் மக்கள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டும் மண்டபத்தினுள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுவர்.

கொவிட்-19 காலத்தில் மின் கட்டண விலக்கு
சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஒன்ராறியோ அரசானது, குடும்பங்களினதும், சிறு வணிகங்கள், பண்ணைகள் போன்றவற்றின் நன்மைக்காக, தற்போது நடைமுறையில் உள்ள உபயோக நேரத்தினை அடிப்படையாகக் கொண்ட மின் கட்டண விதிமுறையினை மார்ச் 24, 2020இலிருந்து 45 நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளது.
இம்முடிவுக்கிணங்க, ஒரு நாளின் எந்த நேரத்தில் நீங்கள் மின்சாரத்தினைப் பயன்படுத்தினாலும், அதன் கட்டணமாக ‘குறைந்த பாவனை நேர’ அடிப்படைக் கட்டணமான ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 10.1 சென்ட் என்ற விகிதத்தில் கட்டணம் அறவிடப்படும். இயன்றளவு வசதியாகவும் விரைவாகவும்  இத்தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அவர்கள் மின்வாரியத்திடம் எவ்வித விண்ணப்பங்களையும் மேற்கொள்ளாமலேயே, தானாகவே அவர்களின்  மின் கட்டணம் சமன்செய்யப்படும்.

வீட்டிலிருந்து கல்வி பயிலல்
வேகமாக அதிகரித்துவரும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில், ஒன்ராறியோ அரசாங்கம், திங்கட்கிழமை, மே 4 வரை மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மூடப்படும் என்று அறிவித்திருந்தது.
இதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் வண்ணம், ஒன்ராறியோ அரசானது, வீட்டிலிருந்து பயிலல் எனும் திட்டத்தின் இரண்டம் கட்டத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை இணையவழியூடாக பயிற்றுவிப்பதற்குத் தேவையான  கணினிகள் மற்றும் தேவையான சாதனங்களைத் தேவையானவர்களுக்கு வழங்குதல், தொலைதொடர்புத் துறையுடன் இணைந்து புதிய, அதிக பயனைத் தரக்கூடிய சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்குதல் போன்ற திட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உங்கள் குழந்தைககள் வீட்டிலிருந்தே கல்வி பயில்வதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு ontario.ca/learnathome எனும் இணையத்தளத்துக்குச் செல்லவும்.

உளவியில் நலம்
கொவிட்-19 (#Covid-19) நோய்த்தொற்றுக் காலத்துக்கான உளவியல் மேம்பாட்டுக்காக (#MentalHealth) ஒன்ராறியோ அரசு 12 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இம்முதலீட்டின்மூலம், ஒன்ராறியோ மக்கள் நெருக்கடியான இந்நேரத்தில் உளநலத்துடன் இருக்க அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒன்ராறியோ அரசு இம்மாகாணத்திலுள்ள கண்காணிப்பு பணியாளர்களுக்கான  ஆதரவை வழங்குவதற்கென புதிய உளவியலாளர்கள் மற்றும் உளநல நிபுணர்களை நியமிப்பதற்காக 2.6 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது.
அத்துடன், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கென 24 மணிநேரமும் இயங்கக்கூடிய புதிய தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமது உளவியல் தொடர்பாக பின்வரும் தொலைபேசி எண்ணுடன் அல்லது இணையத்துடன் தொடர்புகொண்டு உரையாடலாம்: 1-800-668-6868; kidshelpphone.ca

அதேபோல், பெரியவர்களும், நோய்த்தொற்றுக் காலத்தில் களத்தில் நேரடியாகப் பணியாற்றும் பணியாளர்களுக்கெனவும் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.  இவர்கள் மட்டுமன்றி, உளநல ஆதரவு தேவைப்படுவோர், சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கு அடிமையானோர் எனப் பலரும் பின்வரும் தொடர்புகளை அணுகி தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்: 1-866-531-2600; connexontario.ca

‘பவுன்ஸ் பேக் ஒன்ராறியோ’ என்பது ஓர் இலவச, சான்றுகளின் அடிப்படையிலான அறிவாற்றல் நடத்தை சிகிச்சை திட்டமாகும். இத்திட்டம், நூல்கள், தொலைபேசி மற்றும் தொலைக்காணொலியூடான வழிகாட்டல்கள் போன்ற சேவைகளை 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்குகிறது. இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள பின்வரும் இணைப்புகளுடன் தொடர்புகொள்ளவும்: 1-866-345-0224; bouncebackontario.ca

‘Good2Talk’ என்பது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உளநல சேவைக்கான  24 மணிநேரமும் இயங்கும் தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திச் சேவை. 1-866-925-5454 எனும் எண்ணை அழைப்பதன்மூலம் அல்லது 686868 எனும் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், அல்லது  good2talk.ca என்ற இணையத்தளத்துக்குச் செல்வதன்மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொற்றுநோய்த் தடுப்பு வழிமுறைகளைக் கையாண்டு அதிகரித்துவரும் மருத்துவத் தேவைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஒன்ராறியோ மருத்துவமனைகள் இடைவிடாது தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஓய்வுபெற்ற தாதிமார் முதல் மருத்துவ மாணவர்கள் வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மருத்துவ தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அழைக்கப்பட்டுள்ளனர். மாகாணம் முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், ஆங்காங்கே மருத்துவ ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டு நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்மூலம், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாளொன்றுக்கு 18,900 பேருக்கான பரிசோதனை என்ற விகிதத்தினை எட்டும். முதியோர் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில், எமது அரசாங்கம் துரித கதியில் முதியோர் இல்லங்கள், நீண்ட கால பராமரிப்பு நிலையங்கள், முதியோர் ஓய்வு இல்லங்கள் போன்றவற்றின் பாதுகாப்பை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுமட்டுமன்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், எமது அரசாங்கம் அவசரகால நிலையை விரிவுபடுத்தியுள்ளதுடன், அவர்களின்  உடல்நலத்தைப் பேணுவதற்கான அனைத்து கூடுதல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றது. அத்துடன், எமது அரசானது, அரச மட்டத்திலும் சுகாதாரத்துறையிலும் உள்ள அனைத்துத் தரப்பினர்களுடனும் இணைந்து இக்கொடிய தொற்றுநோயை ஒழிப்பதற்காக நடவடிக்கையில் தொடர்ந்து பணியாற்றும்.  

 

Share.

About Author